எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து வீசியவர் கைது


எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து வீசியவர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2022 8:02 PM GMT (Updated: 25 Jan 2022 8:02 PM GMT)

தஞ்சையில், எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையை பெயர்த்து வீசியவர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் அவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்:-

தஞ்சையில், எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையை பெயர்த்து வீசியவர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் அவரை போலீசார் கைது செய்தனர்.

எம்.ஜி.ஆர். சிலை

தஞ்சை வடக்குவீதி பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று இந்த சிலை நிறுவப்பட்டது. 3 அடி உயரமுள்ள பீடத்தில் இந்த மார்பளவு சிலை அமைக்கப்பட்டு இருந்தது.
எம்.ஜி.ஆரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று சிலையை சுத்தம் செய்து மாலை அணிவிப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டு இருந்த பீடத்தில் எம்.ஜி.ஆர். சிலை .காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி, புண்ணியமூர்த்தி, 8-வது வார்டு செயலாளர் சங்கர் மற்றும் அ.தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 
பெயர்த்து வீசப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை பீடத்தின் பின்புறம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் அ.தி.மு.க. வினர் வைத்தனர். பின்னர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஒருவர் கைது

இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் அ.தி.மு.க. வினர் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு சிலையை பெயர்த்து வீசிய தஞ்சை வடக்குவாசல் கல்லறை மேட்டுத்தெருவைச் சேர்ந்த சேகர் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story