ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jan 2022 9:14 PM GMT (Updated: 25 Jan 2022 9:14 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
1,229 பேர்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் தினமும் உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,199 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்தநிலையில் நேற்று மட்டும் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 833 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 779 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 742 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 7 ஆயிரத்து 332 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 722 பேர் பலியாகி உள்ளனர்.
வீட்டு தனிமை
தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் உரிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 6 முதல் 7 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.
அச்சம் தேவையில்லை
அனைத்து தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளன. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதால் விரைவில் குணமடைந்து விடுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

Next Story