செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 26 Jan 2022 12:38 AM GMT (Updated: 26 Jan 2022 12:38 AM GMT)

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த வடக்கு மலையம்பாக்கம் குமரன் நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 18), இவர் போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் நரேஷ்குமார் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த முத்துபிரபு என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரிகரையில் நடைபயிற்சி செல்வதற்காக சென்றார். முத்து பிரபு நடந்து வந்த நிலையில் நரேஷ்குமார் மட்டும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். முத்துபிரபு நடை பயிற்சி சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மட்டும் நின்று கொண்டிருந்தது. சாவி கீழே இருந்தது. ஏரியில் தண்ணீர் கலங்கியபடி காணப்பட்டது.

அப்போது தான் நரேஷ்குமார் ஏரியில் மூழ்கி இருப்பது தெரியவந்தது.

உடல் மீட்பு

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி நரேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் இரவானதால் தேடும் பணியை நிறுத்தினர்.

மீண்டும் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் தண்ணீரில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீர் மூழ்கி வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டருடன் நீரில் மூழ்கி நீண்ட நேர தேடுதலுக்கு பின் நரேஷ்குமாரின் உடலை மீட்டனர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேஷ்குமார் குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கால் தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story