பொங்குபாளையம் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் மற்றும் எச்சம்


பொங்குபாளையம் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் மற்றும் எச்சம்
x
தினத்தந்தி 26 Jan 2022 4:20 PM GMT (Updated: 26 Jan 2022 4:20 PM GMT)

பொங்குபாளையம் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் மற்றும் எச்சம்

அவினாசி:
அவினாசி அருகே பொங்குபாளையம் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் மற்றும் எச்சம் இருந்ததால் வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
5 பேரை சிறுத்தை தாக்கியது
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பாப்பாங்குளம் சோளக் காட்டில் கடந்த 24-ந் தேதி பதுங்கி இருந்த சிறுத்தை 2 விவசாயிகள் உள்பட 5 பேரை தாக்கியது. இதனால் அந்த கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர்.
இதையடுத்து வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சோளக்காட்டில் இருந்து தப்பிய சிறுத்தை சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. நேற்று 3-வது நாளாக வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் சிறுத்தை எங்கு பதுங்கியுள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து உதவி வன பாதுகாவலர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
 தீவிர கண்காணிப்பு
பாப்பாங்குளம் சோளக்காட்டில் பகுதியில் இருந்த சிறுத்தை தற்போது பெருமாநல்லூர் பொங்குபாளையம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்காணிப்பு குழு, தொழில்நுட்ப குழு, விசாரணை குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 10 பேர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 இந்த குழுவினர் பெருமாநல்லூர், ஈட்டி வீரம்பாளையம், பொங்குபாளையம், பரமசிவம் பாளையம் ஆகிய பகுதிகளில் இரவு, பகலாக சிறுத்தையின் இருப்பிடம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
20 கண்காணிப்பு கேமராக்கள்
ஆடு, மாடுகள் காணாமல் போனது என்று ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே விசாரணை மேற்கொள்ளப்படும். சந்தேகப்படும்படியான 20 இடங்களில் கண்காணிப்பு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால கேமராக்களின் எண்ணிக்கை மேலும் அதிகப்படுத்தப்படும்.
மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தை குறித்து மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறுத்தையின் கால் தடம்
இதனிடையே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை, பெருமாநல்லூர் அருகேயுள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நியூ திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாடியதாக அப்பகுதியினர் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கொன்றைக்காடு பகுதியில் எச்சம் இருந்ததை கைப்பற்றி அது சிறுத்தையுடைய எச்சமா? என பரிசோதனைக்கும் அனுப்பியுள்ளனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் தென்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
சிறுத்தை இன்னும் சிக்காததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடனேயே இருக்கும் சூழல் உள்ளது.

Next Story