தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:10 PM GMT (Updated: 26 Jan 2022 5:10 PM GMT)

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


விழுப்புரம், 

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு அனுமதியளிக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

 இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், குமார், முத்துக்குமரன், சங்கரன், அறிவழகன், வேல்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இவர்கள் அனைவரும் தேச உணர்வூட்டி விடுதலை போராட்டத்திற்கு மக்களை கிளர்ந்தெழச் செய்த பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களை நினைவுகூர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் காந்தி சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் தீர்த்தமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் உருவ படங்களை தங்கள் முகத்தில் மாட்டிக்கொண்டு அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களை நினைவுகூர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.

திராவிடர் கழகம்

மேலும் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் அரங்கபரணிதரன், நகர தலைவர் பூங்கான், செயலாளர் சதீஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பகவன்தாஸ், நிர்வாகிகள் ஸ்ரீதர், பஞ்சமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story