நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:12 PM GMT (Updated: 26 Jan 2022 5:12 PM GMT)

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:-

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டம்

டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இந்த ஆண்டு தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து நாகை அவுரி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜா, வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுபாஷ் சந்திர போஸ், முருகையன், பகு, செந்தில்குமார், தமிழ்ச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதாக கூறி திருமருகல் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து பிரசார கூட்டம் நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு, மாநில விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கீழையூர்

அதேபோல் கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கீழையூர் கடைத்தெருவில் மத்திய அரசை கண்டித்து பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கூனார். நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூர் கடை தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அபூபக்கர் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் முத்தையன் முன்னிலை வகித்தார். நாகை மாலி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

ஊர்வலம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை புறக்கணித்து மத்திய அரசை கண்டித்து வ.உ.சி., வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் இடம் பெற்ற வாகன ஊர்வலம் நடந்தது. கீழ்வேளூர் அருகே சாட்டியகுடி கடைத்தெருவில் இருந்து நாகை வரை இந்த ஊர்வலம் நடந்தது. இதில் ஜனநாயக வாலிபர் சங்க நாகை மாவட்ட தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் பிரபாகரன், மாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

வாய்மேடு

வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு கோவை.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அம்பிகாபதி, வெற்றியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story