கடலூரில், குடியரசு தின விழா: கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தேசிய கொடி ஏற்றினார்


கடலூரில், குடியரசு தின விழா: கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:24 PM GMT (Updated: 2022-01-26T22:54:13+05:30)

கடலூரில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தேசிய கொடி ஏற்றினார்.

கடலூர், 

நாடு முழுவதும் நேற்று 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி மைதானத்தின் நுழைவு வாயில் முதல் விழா நடைபெறும் மேடை வரை அலங்கார தோரணங்கள், வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான அரசு அலுவலர்கள் மட்டும் சென்றனர். அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அமருவதற்காக சமூக இடைவெளி விட்டு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. அதில் அவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ரஞ்ஜீத்சிங் காலை 8.05 மணி அளவில் விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வரவேற்றார்.தொடர்ந்து மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ரஞ்ஜீத்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீசாரின் இசை வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர்.

பாராட்டு சான்றிதழ்

அதன்பிறகு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர்.
அதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்களை, 86 போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 139 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றி தழை வழங்கினார்.

தியாகிகளுக்கு மரியாதை

கொரோனா பரவல் காரணமாக தியாகிகளை விழாவுக்கு அழைத்து கவுரவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதால் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரம் வீட்டுக்கே நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்கள் வசிக்கும் இல்லங்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த தாசில்தார்கள் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் பொறுப்பு கலெக்டராக தேசிய கொடி ஏற்றுவார் என்று மாவட்ட நிர் வாகம் சார்பில் அறிவிக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, இணை இயக்குனர் (மருத்து வம்) ரமேஷ்பாபு மற்றும் தாசில்தார்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண் டனர். விழா நிகழ்ச்சிகளை மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜான்சிராணி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் சஞ்சய் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Next Story