விவசாயி வீட்டின் மேற்கூரையில் கிடந்த மற்றொரு துப்பாக்கி குண்டு


விவசாயி வீட்டின் மேற்கூரையில் கிடந்த மற்றொரு துப்பாக்கி குண்டு
x
தினத்தந்தி 26 Jan 2022 6:58 PM GMT (Updated: 26 Jan 2022 6:58 PM GMT)

விவசாயி வீட்டின் மேற்கூரையில் கிடந்த மற்றொரு துப்பாக்கி குண்டால் பரபரப்பு ஏற்பட்டது

பாடாலூர்
பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் மருதடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் மலையடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு, காவல்துறையினர் அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஈடுபட்டபோது மலையின் பின் பகுதியில் ஈச்சங்காடு என்ற இடத்தில் உள்ள சுப்பிரமணி என்ற விவசாயி வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் சேதமடைந்தது. சம்பவ இடத்தை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி மற்றும் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
 விசாரணை
விசாரணையில், திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 48 பேர், 4 விதமான துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும், அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய ஒரு குண்டு சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தியதும் தெரிய வந்தது. மேலும், அந்த துப்பாக்கி குண்டு பயிற்சி தளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விவசாயி வீட்டின் மீது விழுந்தது எப்படி?, அது, எந்த வகையான துப்பாக்கி குண்டு?, எவ்வளவு திறன் வாய்ந்தது? என்று விசாரணை நடத்தப்பட்டது.
மற்றொரு துப்பாக்கி குண்டு
இந்தநிலையில் நேற்று அதே சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையில் மற்றொரு துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கைப்பற்றிய போலீசார் அதனை தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
போலீசார் வழக்குப்பதிவு
விவசாயி சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையை துளைத்த துப்பாக்கி குண்டு சம்பந்தமாக நாரணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் நாரயணசாமி கொடுத்த புகாரின்பேரில், பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன் தெரிவித்தார். 
மேலும் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி தடய அறிவியல் நிபுணர் ராஜேந்திரன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில், சுப்பிரமணி மேற்கூரையின் கீழே வீட்டில் பேத்திக்கு தொட்டில் கட்டப்படுமாம். இந்த சம்பவத்தில் உயிர்சேதம் இல்லை என்றாலும் நாரணமங்கலம் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தை மூட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 


Next Story