‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 26 Jan 2022 9:14 PM GMT (Updated: 26 Jan 2022 9:14 PM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ரோட்டோரம் குப்பை மேடு
வெள்ளோடு அருகே கள்ளுக்கடை மேட்டில் இருந்து கனகபுரம் செல்லும் ரோட்டின் ஓரம் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியின் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டோரம் உள்ள குப்பைகளை அகற்றவும், அங்கு மீண்டும் கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வெள்ளோடு. 

சுத்தம் செய்யப்படுமா?
ஈரோடு நாச்சிப்பா வீதியில் பல நாட்களாக சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. இதனால் கழிவுகள் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. ஏராளமான கொசுக்களும் உற்பத்தியாகி பொதுமக்களை கடிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நாச்சியப்பா வீதியில் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும். 
பொதுமக்கள், நாச்சியப்பாவீதி, ஈரோடு. 

 இருசக்கர வாகனங்களால் இடையூறு
ஈரோடு அகில்மேடு 7-வது வீதி, வாசுகி வீதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களுடைய வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திவிடுகிறார்கள். இதனால் அந்த சாலைகளில் பஸ், கார், வேன் என எந்த வாகனமும் செல்ல முடியாமல் இடையூறாக உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அகில்மேடு 7-வது வீதி, வாசுகி வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு. 

ஆமை வேகத்தில் பணி
ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அந்த வழியாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது எனவே சாலை அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க ஆவன செய்யவேண்டும்.
பொதுமக்கள், வீரப்பன்சத்திரம்.

அடிப்படை வசதி
ஈரோடு சூளையில் வி.ஆர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு தெருவிளக்கு, தார்ரோடு, சாக்கடை வடிகால் என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் சூளை வி.ஆர். காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு சூளை. 

வேகத்தடை அமைக்கப்படுமா?
ஈரோடு சவீதா சிக்னலில் இருந்து பஸ்நிலையம் வரும் வழியில் ரோட்டில் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த ரோட்டில் தேவைப்படும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கவேண்டும்.
கவிதா, மாணிக்கம்பாளையம்.

பழுதடைந்த தரைப்பாலம்
ஈரோடு வைராபாளையத்தில் மாதவம்காடு பகுதியில் ஒரு தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த மழை காலத்தில் மிகவும் சேதமடைந்துவிட்டது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறுகின்றன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மாதவம்காடு தரைப்பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சீரமைக்கவேண்டும்
சுரேஷ், ஈரோடு. 

Next Story