கொரோனா கட்டுப்பாடுகளுடன் குடியரசு தினவிழா; கர்நாடக அரசுக்கு கவர்னர் பாராட்டு


கொரோனா கட்டுப்பாடுகளுடன் குடியரசு தினவிழா; கர்நாடக அரசுக்கு கவர்னர் பாராட்டு
x
தினத்தந்தி 26 Jan 2022 9:37 PM GMT (Updated: 26 Jan 2022 9:37 PM GMT)

பெங்களூருவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா நடந்தது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கொரோனா பரவலை திறமையாக கையாண்டதாக கர்நாடக அரசை பாராட்டினார்.

பெங்களூரு: பெங்களூருவில் கொேரானா கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா நடந்தது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கொரோனா பரவலை திறமையாக கையாண்டதாக கர்நாடக அரசை பாராட்டினார். 

குடியரசு தின விழா

பெங்களூரு மாநகராட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு கப்பன் ரோட்டில் உள்ள மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு சரியாக காலை 9 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு துணை ராணுவ வீரர்கள், கர்நாடக ஆயுதப்படை, போலீசார் உள்பட பல்வேறு படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. 

இந்த  கவர்னர் தாவர் சந்த் கெலாட் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் மீண்டும் விழா மேடைக்கு வந்த கவர்னர் தாவர் சந்த் கெலாட், குடியரசு தின உரையாற்றினார். 
அவர் பேசும்போது கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக கர்நாடக அரசு மிகுந்த திறமையுடன் சிறப்பான முறையில் போரிட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நாம் 2022-ம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்துள்ளோம். கொரோனாவுக்கு எதிராக கர்நாடக அரசு அல்லும்-பகலும் போராடி வருகிறது. இதன் காரணமாக நோய் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

2 தடுப்பூசிகள்

இந்த கொரோனா பரவலை ஒரு வாய்ப்பாக கருதி மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். வென்டிலேட்டர் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து இருக்கிறோம். கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை உருவாக்குவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இவை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

கொரோனா பரவல் காலத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் டாக்டர்கள் உள்பட மருத்துவ துறையினர், போலீஸ் துறையினருக்கு அரசு நன்றி செலுத்துகிறது. கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியது. இதனால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. கர்நாடகம் வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்று.

கல்விக்கு ஊக்கத்தொகை

சுதந்திர தின பவள விழாவையொட்டி மாநில அரசு 14 வகையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளது. அம்ரித் கிராம பஞ்சாயத்துகள் மேம்பாட்டு திட்டம், அம்ரித் கிராமப்புற வீட்டு வசதி திட்டம், அம்ரித் அரசு பள்ளிகள் மேம்பாட்டு திட்டம் போன்றவை இதில் அடங்கும். கர்நாடகத்தில் 75 சதவீத நிலத்தில் மழை அடிப்படையில் விவசாயம் செய்யப்படுகிறது.

அதனால் நீர்நிலைகளை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. ரூ.1,472 கோடியில் நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டம் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 16 ஆயிரத்து 176 குழந்தைகளுக்கு ரூ.4.41 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா 2-வது அலை

சுகாதாரத்துறையில் பணி நியமனங்களை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 746 தொழில்நுட்ப வல்லுநர்கள், 1,048 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் நல சட்டங்களை மீறியதாக தனியார் நிறுவனங்களுக்கு அபராதமாக ரூ.21 லட்சத்து 19 ஆயிரத்து 309 விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கட்டுமான நல வாரியத்தில் 26.73 லட்சம் தொழிலாளர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.8,390 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையின்போது நிவாரணமாக 11.82 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.236 கோடி வழங்கப்பட்டது. 18 ஆயிரத்து 777 எக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக நீர் மற்றும் காற்று மாசுபாடுகளை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலைகளை மேம்படுத்த...

பெங்களூருவில் தற்போது 56 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பெல்லந்தூர், வர்த்தூர் ஏரிகளில் நீர் மாசு அடைவதை தடுக்க கோரமங்களா, சல்லகட்டா வேலி திட்டத்தை அமல்படுத்தப்படும். இதன் மூலம் ஏரிகளுக்கு வரும் நீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இதனால் நீர் மாசு அடைவது தடுக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. டெண்டருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 397 நகரங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரங்களாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதில் மைசூரு மாநகராட்சி 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. சீர்மிகு திட்டத்தின் கீழ் 77 சாலைகள் 158 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 84 கிலோ மீட்டர் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் கொள்முதல்

குப்பைகளை நிர்வகிப்பதில் சிறந்த நகரமாக பெங்களூரு தேர்வு செய்யப்பட்டு அதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு ஏற்ற சாலைகளை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது 47 ரோடுகளில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. கலபுரகி, சிவமொக்கா, விஜயாப்புரா, பல்லாரி, ஹாசன், கார்வார், ராய்ச்சூரில் விமான நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.28 கோடியில் போலீஸ் துறைக்கு தேவையான ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.15 கோடியில் வயர்லஸ் கருவிகள் வாங்கப்படுகின்றன. கொரோனாவால் உயிரிழந்த 173 போலீசாருக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட காரணத்தால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 945 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

முட்டை உற்பத்தி

பால் உற்பத்தியில் கர்நாடகம் 2-வது இடத்திலும், முட்டை உற்பத்தியிலும் 6-வது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் 10-வது இடத்திலும் உள்ளது. கால்நடைத்துறை விவசாய உற்பத்தி வளர்ச்சியில் 26.81 சதவீதத்தையும், மாநிலத்தின் மொத்த உற்பத்தயில் 3.53 சதவீதத்தையும் பங்களிப்பாக வழங்குகிறது. அரசு வேளாண் சந்தைகளில் விவசாயிகள் செலுத்த வேண்டிய வரி குறைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 54 இடங்களில் 9.24 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டும் பணியை மாநில கிடங்கு வாரியம் மேற்கொண்டுள்ளது. இதில் 4.70 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. கர்நாடகத்தில் காடுகளில் 2.39 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. பொதுமக்களுக்கு 1.87 கோடி மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

யானைகளின் எண்ணிக்கை

கர்நாடக வனப்பகுதிகளில் 524 புலிகள் உள்ளன. அதிக புலிகளை கொண்ட மாநிலங்களில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது. வனப்பகுதிதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 6,049 யானைகள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் கர்நாடகத்தின் பங்கு 25 சதவீதம் ஆகும். அதிக யானைகள் உள்ள மாநிலங்களில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளன.

ஆதிதிராவிடர்கள், பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரூ.11 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு தேக்வாண்டோ, கராத்தே உள்ளிட்ட சுய பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஊட்டச்சத்து உணவு

மாத்ருபூர்ணா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பிரதமர் மாத்ரு வந்தன திட்டத்தின் கீழ் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். கர்நாடகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. இதை நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அலட்சியத்திற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை நாம் நினைவு கூர்வோம். தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் நம்மை அர்பணித்து கொள்வோம்.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் கூறினார்.

200 பேருக்கு அனுமதி

இந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சபாநாயகர் காகேரி, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதுபோல் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவில்லை. 

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவர்களும் சமூகவிலகலை கடைப்பிடித்து அமரும் வகையில் இடைவெளிவிட்டு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. 

Next Story