பழைய சாதத்துடன் முட்டை பொரியல் சாப்பிட்ட மாணவர் திடீர் சாவு


பழைய சாதத்துடன் முட்டை பொரியல் சாப்பிட்ட மாணவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 27 Jan 2022 4:04 PM GMT (Updated: 27 Jan 2022 4:04 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே பழைய சாதத்துடன் முட்டை பொரியல் சாப்பிட்ட மாணவர் திடீரென இறந்து போனார்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே பழைய சாதத்துடன் முட்டை பொரியல் சாப்பிட்ட மாணவர் திடீரென பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10-ம் வகுப்பு மாணவர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகன் ரஞ்சித் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அருணாசலம் வெளியூருக்கு சென்றுவிட்டார். வீட்டில் கனகலட்சுமி, ரஞ்சித் மட்டும் இருந்தனர். இரவில் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள கடையில் இருந்து முட்டை வாங்கி வந்தனர்.
முட்டை பொரியல்
பின்னர் வீட்டில் வைத்து முட்டை பொரியல் செய்து, பழைய சாதத்துடன் சேர்த்து 2 பேரும் சாப்பிட்டனர். நள்ளிரவில் கனகலட்சுமி, ரஞ்சித்திற்கு திடீரென்று வாந்தி, பேதி, வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் அவர்கள் வலியால் அலறி துடித்தனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கனகலட்சுமி வீட்டிற்கு சென்றனர்.
தாயையும், மகனையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பரிதாப சாவு
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரஞ்சித் நேற்று முன்தினம் இரவில் பரிதாபமாக இறந்தார். கனகலட்சுமி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார், ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழைய சாதத்்துடன் முட்டை பொரியல் சேர்த்து சாப்பிட்டதால் ஒவ்வாமை காரணமாக மாணவன் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே ரஞ்சித் சாவுக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
பழைய சாதத்துடன் முட்டை பொரியல் சாப்பிட்ட மாணவர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story