காளியண்ணன்புதூர் அரசு பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா


காளியண்ணன்புதூர் அரசு பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jan 2022 4:16 PM GMT (Updated: 2022-01-27T21:46:39+05:30)

கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன்புதூர் அரசு பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன்புதூர் அரசு பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அரசு மேல்நிலைப்பள்ளி

கிணத்துக்கடவு அருகே காளியண்ணன்புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 29 ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் 649 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

10 ஆசிரியர்களுக்கு கொரோனா

அரசு பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் 19 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஒரே பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விரைந்து வந்த சுகாதாரத்துறை பள்ளியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜிங், வைட்டமின் சி, மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

கிருமிநாசினி தெளிப்பு

ஒரே பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளியில் நடைபெற்றுவந்த ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளியில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், கோவில்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி, பிளீச்சிங் பவுடர் தூவும் பணிகள் நடைபெற்றது. மேலும் பள்ளி வளாகம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பள்ளி நுழைவு வாயிலில் பேனர் வைக்கப்ப்பட்டது. 

7 நாட்கள் விடுமுறை

ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 3-ந் தேதி வழக்கம்போல் பள்ளி திறக்கப்படும் என்று கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கிணத்துக்கடவு தாலுகாவில் இதுவரை கொரோனாவால் 1,063 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story