அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றம்


அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றம்
x
தினத்தந்தி 27 Jan 2022 4:16 PM GMT (Updated: 2022-01-27T21:46:45+05:30)

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

பொள்ளாச்சி

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிகள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. அதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

 இதற்கிடையில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். காந்தி சிலை, பாலக்காடு ரோடு, மகாலிங்கபுரம் வளைவு, பல்லடம் ரோடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. 

இதை தவிர வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சி தொடர்பாக வைத்திருந்த விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. 

சுவர் விளம்பரம்

மேலும் கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு, பாலக்காடு ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புகளில் அரசியல் கட்சியினர் எழுதியிருந்த சுவர் விளம்பரங்களை பெயிண்ட் அடித்து அழித்தனர். 

இதைப்போன்று சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர், கோட்டூர், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர்,  உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளிலும்தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமலும், தலைவர்கள் சிலைகள் மூடாமல் இருந்தன. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வால்பாறை

வால்பாறை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 21 வார்டு பகுதிகளிலும் பொதுஇடங்கள், பயணிகள் நிழற்குடைகள் உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

இதனால் 1 முதல் 11-வது வார்டு வரையில் உள்ளவர்கள் வேட்பு மனுக்களை பெறுவது, தாக்கல் செய்வது போன்ற பணிகளை நகராட்சி பொறியாளரும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான வெங்டாசலத்திடமும் மேற்கொள்ள வேண்டும். 

12 முதல் 21-வது வார்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி துப்புரவு அதிகாரியும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான செல்வராஜிடம் தேர்தல் குறித்த பணிகளை மேற்கொள்ளலாம். 

வருகிற 4-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நாட்களில் மனுக்களை பெற்று தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலரான ஆணையாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story