குமரியில் 56 இடங்களில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி


குமரியில் 56 இடங்களில் இன்று முதல்  வேட்புமனு தாக்கல் வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி
x
தினத்தந்தி 27 Jan 2022 5:26 PM GMT (Updated: 27 Jan 2022 5:26 PM GMT)

குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 56 இடங்களில் வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 56 இடங்களில் வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. குமரி மாவட்டத்தைப் பொறுத்த வரை நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு மற்றும் பத்மநாபபுரம் நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினர் எந்த வார்டில் யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும்? யாருக்கு சீட் கொடுப்பது? என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். அதோடு பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் குதிக்கிறார்கள். இதனால் குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடிபிடித்துள்ளது.
வாக்காளர்களை கவர எந்த விதமான அறிவிப்புகளை வெளியிடலாம் என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானவர்கள் தங்களுக்கு செல்வாக்கு உள்ள வார்டுகளில் வாக்குகளை பெறுவதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டனர்.
வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. அந்த வகையில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம் மற்றும் கொல்லங்கோடு ஆகிய நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் அந்தந்த நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். 
இதே போல 51 பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். இவ்வாறு குமரியில் மொத்தம் 56 இடங்களில் வேட்புமனு தாக்கல் நடக்கிறது. 
காலை 10 மணி முதல்...
வேட்புமனுவை பெற தனித்தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். இந்த வேட்புமனுக்களை பெறும் பணிகளுக்காக 115 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 
அதாவது நாகர்கோவில் மாநகராட்சியில் குறிப்பிட்ட 52 வார்டுகள் 6-ஆக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு ஒரு அதிகாரி என 6 அதிகாரிகளும் கொல்லங்கோடு நகராட்சிக்கு 4 அதிகாரிகளும் உள்பட 115 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் மொத்தம் 56 இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே அனுமதி
வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் ஒரு நபர் மட்டுமே வரவேண்டும் என்றும், பொது இடங்களில் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story