நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:51 PM GMT (Updated: 27 Jan 2022 5:51 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி ஜெ.ஜி. நர்சரி பிரைமரி பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விழுப்புரம் கே.கே.நகர் தேர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மழலையர் தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 3 நகராட்சிகளுக்கும், 7 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் 210 உறுப்பினர்களை தேர்வு செய்ய உள்ளோம். இத்தேர்தலுக்காக 348 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இத்தேர்தலில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 186 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
 தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் இருப்பதால் பறக்கும் படைகள் அமைத்து தேர்தல் சம்பந்தமாக ஏதேனும் விதிமீறல்கள் இருக்கிறதா என்பதை காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகள் மூலமாகவும் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு பறக்கும் படை, ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ஒரு பறக்கும் படை என 10 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

மாவட்டத்தில் ஒவ்வொரு நகராட்சிக்கும், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் என்று தனித்தனியாக வாக்கு எண்ணும் மையங்களை அமைத்துள்ளோம். நாளை முதல் (அதாவது இன்று) வேட்பு மனுதாக்கல் தொடங்க இருக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறார்கள்.வேட்பு மனுதாக்கல் நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக விழுப்புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
மேலும் மாவட்டத்தில் உள்ள 348 வாக்குச்சாவடி மையங்களிலும் பயன்படுத்துவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 15 சதவீத வாக்குச்சாவடிகள் பதற்றமான, மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அவை எந்தெந்த வாக்குச்சாவடிகள் என்பது ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து கொடிக்கம்பங்களில் உள்ள கொடிகளை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நேர்மையாகவும்,   வெளிப்படையாகவும்

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் யாரேனும் பரிசு பொருட்களை கொடுத்தோ, அல்லது வேறு எந்தவொரு பொருளையும் கொடுத்தோ வாக்குகளை பெறும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காது. ஆகவே தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story