தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் சாலைமறியல்


தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:55 PM GMT (Updated: 27 Jan 2022 5:55 PM GMT)

செய்யாறு அருகே தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அருகாவூரில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் 150 பேர் பணியாற்றி வருகின்றனர். வழக்கமாக காலை 9 மணி அளவில் வருகை பதிவேட்டில் பதிவு செய்து பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் வருகை பதிவு மேற்கொள்வதால் காலை 7.30 மணி அளவில் அனைவரும் வருகை தந்து மின்னணு பதிவின் மூலம் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இதற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு-ஆரணி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது பணியாளர்கள், ஆன்லைன் பதிவினை கைவிட்டு விட்டு, பழைய நடைமுறைப்படியே வருகை பதிவு செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story