தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Jan 2022 7:59 PM GMT (Updated: 27 Jan 2022 7:59 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாக்கடை கால்வாய் சீரமைக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த வெங்கடார் காலனியில் சாலையின் குறுக்கே செல்லும் சாக்கடை கால்வாய் மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே ஆபத்து ஏற்படும் முன் இதனை சீரமைக்க வேண்டும் என கடந்த 16-ந் தேதி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனடியாக சேதமடைந்த சாக்கடை கால்வாயில் மூடியை அதிகாரிகள் சரி செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்'திக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
-ஊர்மக்கள், வெங்கடார் காலனி, நாமக்கல்.
தற்காலிக கழிப்பிட வசதி
சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அங்கு கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கட்டுமான பணிகள் முடிவடையும் வரை தற்காலிக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஜி.கமல்ராஜா, வாழப்பாடி, சேலம்.
பயன்படாத ஆழ்துளை கிணறு
தா்மபுரி மாவட்டம் கரகதஅள்ளி ஊராட்சி ஹவுசிங்போர்டு கடமடை குடியிருப்பு மாரியம்மன் கோவில் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் குழாய் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த ஆழ்துளை கிணற்றில் குழாய் அமைத்து விரைவில் அடிபம்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஹவுசிங்போர்டு கடமடை, தர்மபுரி.
ரவுண்டானா அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் 3 ரோடு சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஞானவேல் துரைசாமி, மத்தூர், கிருஷ்ணகிரி.
சங்கு ஒலிக்குமா?
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் நகராட்சி மூலம் கடந்த 50 ஆண்டுகளாக ஒலித்து வந்த சங்கொலி 2 ஆண்டுகளாக ஒலிக்கவில்லை. ஆத்தூரின் அடையாளமாக திகழும் சங்கொலிைய மீண்டும் ஒலிக்க செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளோம். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக தனிக்கவனம் செலுத்தி சங்கு மீண்டும் ஒலிக்க செய்ய வேண்டும்.
-மாதேஸ்வரன், ஆத்தூர்.
குப்பைகள் அள்ளப்படுமா? 
சேலம் கார்பெட் தெருவில் குப்பைதொட்டி இருந்தும் அதன் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிரஞ்சீவிகுமார், கார்பெட் தெரு, சேலம்.
பன்றிகள் தொல்லை
சேலம் மாவட்டத்தில் எஸ்.கே.டவுன்ஷிப், தாதம்பட்டி, அம்மாபேட்டை காலனி 3-வது கிராஸ் பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாக்கடை கழிவுகளை அந்த பன்றிகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ்வரன், எஸ்.கே.டவுன்ஷிப், சேலம்.
சுகாதார சீர்கேடு 
சேலம் மணியனூர் திருவேங்கடம் பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. சுகாதார கேடு நிலவுவதால் இந்தபகுதி மக்கள், குழந்தைகள் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.மூர்த்தி, திருவேங்கடம், சேலம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தும்பிப்பாடி கிராமம், முள்ளிச்செட்டிப்பட்டி கிழக்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள கழிவுநீர் கால்வாயை மேம்பால பணிக்காக அடைத்துவிட்டனர். இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள், முதியவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை நீர் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-பி.பரத்குமார், ஓமலூர். 
மரங்கள் பாதுகாக்கப்படுமா?
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் பேரூராட்சி சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது அங்கு மாடுகளை கட்டி மரங்களை சேதப்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கன்னங்குறிச்சி, சேலம்.

Next Story