ஆயுர்வேத மருந்து ஆலை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை


ஆயுர்வேத மருந்து ஆலை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Jan 2022 9:16 PM GMT (Updated: 27 Jan 2022 9:16 PM GMT)

பெங்களூரு அருகே, ஆயுர்வேத மருந்து ஆலை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 5 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு அருகே, ஆயுர்வேத மருந்து ஆலை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 5 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரு கனகபுரா ரோடு ககலிபுராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஈஸ்வர்குமார்(வயது 49). இவர் ககலிபுராவில் உள்ள ஆயுர்வேத தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஈஸ்வர்குமாருக்கும், அவரது மனைவி ரஷ்மிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஈஸ்வர்குமார் மீது ககலிபுரா போலீஸ் நிலையத்தில் ரஷ்மி புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் ஈஸ்வர்குமாரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்து இருந்தனர். இதன்பின்னர் வீட்டிற்கு வந்த ஈஸ்வர்குமார் தனது அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மிரட்டல்

இந்த நிலையில் நேற்று ககலிபுரா போலீஸ் நிலையத்தில் ஈஸ்வர்குமாரின் சகோதரர் ரேவண்ணா சித்தேஸ்வர் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது சகோதரர் ஈஸ்வர்குமார் சாவுக்கு அவரது மனைவி ரஷ்மி, ரஷ்மியின் சகோதரி ரூபா, ரூபாவின் கணவர் பவீன், ரஷ்மியின் சகோதரர் பசவராஜ், ஜெயநகர் உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் ஆகியோர் தான் காரணம்.

ரஷ்மி, ரூபா, பவீன், பசவராஜ் ஆகியோர் கூறியதன்பேரில் எனது சகோதரரை விசாரணைக்கு அழைத்து உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படியும், இல்லாவிட்டால் வழக்குப்பதிவு செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து வேலையையும் காலி செய்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் எனது சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதி வைத்திருந்த 14 பக்க கடிதத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி கூறியுள்ளார்.

நடவடிக்கை எடுப்பது குறித்து...

எனது சகோதரரை தற்கொலைக்கு தூண்டிய ரஷ்மி, ரூபா, பவீன், பசவராஜ், உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் ரஷ்மி, ரூபா, பவீன், பசவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆனால் உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ககலிபுரா போலீசார் கூறியுள்ளனர்.

Next Story