கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் பிப்ரவரி 14-ந் தேதி கூடுகிறது


கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் பிப்ரவரி 14-ந் தேதி கூடுகிறது
x
தினத்தந்தி 27 Jan 2022 9:41 PM GMT (Updated: 27 Jan 2022 9:41 PM GMT)

கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் பிப்ரவரி 14-ந்தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடுகிறது. மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் பிப்ரவரி 14-ந்தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடுகிறது. மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

சட்டசபை கூட்டத்தொடர்

கர்நாடக மந்திரிசபை கூட்டம் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது.இதில் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரை வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடப்பு ஆண்டின் முதல் கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மார்ச் மாதம் முதல் வாரத்தில் கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த கூட்டத்தொடர் 25-ந்தேதி வரை நடக்கிறது. மந்திரிசபையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

வார இறுதி நாள் ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பள்ளி-கல்லூரிகளை திறப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குதிரை பந்தயத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசை குறை சொல்வதே காங்கிரசின் வேலை. காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது என்ன செய்தனர் என்பதை சற்று அவர்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. ஆனால் அமலில் இருந்த வார இறுதி நாள் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் விடுதிகள், உணவகங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. மேலும் கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

கர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து நிபுணர் குழுவின் ஆலோசனையை வழங்குமாறு கேட்டுள்ளோம். அந்த குழுவினர் ஆலோசனை வழங்கிய பிறகு 3 நாட்களில் கூடி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அப்போது பெங்களூருவில் பள்ளிகளை திறப்பது குறித்தும் தீர்மானிக்கப்படும்.

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து மந்திரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். மாநகராட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக உள்ளது. கட்சிக்கும், அரசுக்கும் இடையே நல்லுறவு நன்றாக இருக்கிறது. அதுகுறித்த ஒரு ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று நாளையுடன் (இன்று) 6 மாதங்கள் ஆகின்றன.

பிறந்த நாள்

இதையொட்டி 6 மாதங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஒரு கையேட்டை வெளியிட உள்ளோம். எனது பிறந்த நாளும் நாளை (இன்று) வருகிறது. ஆனால் நான் எப்போதும் பிறந்த நாளை கொண்டாடியது இல்லை. இந்த நாளில் புதிய திட்டங்களை அறிவிக்கும் எண்ணம் இல்லை. கடந்த 6 மாதங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூறப்படும். விவசாயிகளிடம் இருந்து ராகி, சோளம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

முதல் முறையாக...

சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தின் முதல் நாளாக 14-ந்தேதி கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார். அவரது உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும். 
கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற பிறகு நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள அவர் முதல் முறையாக மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story