வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1,964 அலுவலர்கள் நியமனம்


வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1,964 அலுவலர்கள் நியமனம்
x
தினத்தந்தி 28 Jan 2022 2:10 PM GMT (Updated: 28 Jan 2022 2:10 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1,964 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய  1,964 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

நகர்ப்புற தேர்தல்

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 409 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த அரசு ஊழியர்கள் 2,452 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. அவர்களது விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. 

அலுவலர்கள் ஒதுக்கீடு

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் நடந்தது. இந்த பணியை கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஒதுக்கீட்டில் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் வீதம் மற்றும் கூடுதலாக அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நீலகிரியில் 409 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1,964 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த ஒதுக்கீட்டில் அவர்கள் எந்த நகராட்சி அல்லது எந்த பேரூராட்சியில் பணிபுரிய உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளலாம். அடுத்து நடைபெறும் ஒதுக்கீட்டில் 4 பேர் குழு, 3-வது ஒதுக்கீட்டில் எந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளனர் என்று முடிவு செய்யப்படுகிறது. 

கட்டுப்பாட்டு அறை

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வருகிற 31-ந் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவது குறித்து பயிற்சி அளிக்கின்றனர். இதற்காக 11 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தல் பிரிவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதற்காக 0423-2441822, 0423-2444821 என்ற தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story