தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 28 Jan 2022 5:17 PM GMT (Updated: 28 Jan 2022 5:17 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

குரங்குகள் தொல்லை

கோத்தகிரி அரவேனு பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்து உள்ளது. வனப்பகுதியை விட்டு வெளியே வந்த குரங்குகள் ஜாலியாக சாலையில் உலா வருகின்றன. அத்துடன் அந்த வழியாக தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இருக்கும் பொருட்களை பறித்துக்கொண்டு மரத்தில் ஏறிவிடுகிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

பெள்ளிராஜ், கோத்தகிரி.

புதர் மண்டிய நீரோடை 


  கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து டானிங்டன் செல்லும் சாலையோரத்தில் செல்லும் நீரோடை முழுவதும் புதர்ச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மூடி உள்ளது. இதனால் நீரோடையில் நீரோட்டம் தடைபட்டு தண்ணீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற் பட்டு வருகிறது. எனவே இந்த நீரோடையில் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றி, ஓடையைத் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  விஷ்ணு, கோத்தகிரி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்


  கோவை ரத்தினபுரி சம்பத் வீதியும், பட்டேல் வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் அவை குவிந்து கிடப்பதால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது. எனவே அதிகாரிகள் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

  பால்ராஜ், பட்டேல்வீதி.

கூடுதல் போலீசார் வேண்டும்


  பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் காந்தி சிலை முன்பு நால் ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு போக்குவரத்தை சீரமைக்க தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரே ஒரு போலீசார் மட்டும்தான் நின்று போக்குவரத்தை சீரமைத்து வருகிறார். ஆனால் இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.

  சித்ராதேவி, பொள்ளாச்சி.

திறந்தவெளியில் குப்பைகள்


  கோவை ஜி.வி.ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் இருபுறமும் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. காற்று வீசும்போது அந்த குப்பைகள் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் விழுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இங்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

  பாஸ்கரன், மசக்காளிபாளையம்.

குண்டும் குழியுமான சாலை


  கோவை மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட சரவணம் பட்டி கரட்டுமேடு வி.கே.வி.நஞ்சப்பா நகரில் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அத்துடன் அங்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, பழுதான இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

  ஜெயபிரகாஷ, கரட்டுமேடு.

தினத்தந்தி செய்தி எதிரொலி:

குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது


  கோவை கவுண்டம்பாளையம் மூவர் நகர் பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

  முருகேசன், செந்தமிழ்நகர்.

அடிப்படை வசதி இல்லை


  பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. சாலை மற்றும் சாக்கடை கால் வாய் அமைக்கும் பணியும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் கழவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுதன், பொங்காளியூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கோவை மாநகராட்சி 65-வது வார்டு சவுரிபாளையம் டேங் ரோட்டில் சாக்கடை முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் சாலையில் வழிந்தோடுவதால் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

  நரசிம்மன், சவுரிபாளையம்.

பழுதான தார்சாலை

  கோவை தடாகம் சாலையில் வேலாண்டிபாளையம் முதல் இடையர்பாளையம் வரை வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

  தீபன், இடையர்பாளையம்.



Next Story