உரிமம் பெற்ற துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் அரவிந்த் உத்தரவு


உரிமம் பெற்ற துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில்  ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் அரவிந்த் உத்தரவு
x
தினத்தந்தி 28 Jan 2022 5:40 PM GMT (Updated: 28 Jan 2022 5:40 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடும் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அட்டவணை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதன் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் பொருட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்ற அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்கள் வசம் வைத்துள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்தல் காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144 -ன் படி படைக்கலன் உரிமம் பெற்ற உரிமதாரர்கள் படைக்கலனை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே படைக்கல உரிமதாரர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கிகளை ஒப்படைக்காமல், பதுக்கி வைத்திருந்தால் அத்தகைய நபர்கள் மீது படைக்கலச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒத்துழைப்பு
போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் துப்பாக்கிகள், தேர்தல் பணிகள் முடிவுற்ற பின்னர் சம்பந்தப்பட்ட உரிமதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். இதனை தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகள் குறித்த விவரங்களை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் நிலையங்களின்படி துப்பாக்கிகள் வாரியாக அறிக்கை செய்திடல் வேண்டும். எனவே குமரி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் துப்பாக்கிகளை உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story