தூத்துக்குடியில் வேளாண்மைத்துறை இயக்குனர் திடீர் ஆய்வு


தூத்துக்குடியில் வேளாண்மைத்துறை இயக்குனர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Jan 2022 6:35 PM GMT (Updated: 28 Jan 2022 6:35 PM GMT)

தூத்துக்குடியில் வேளாண்மைத்துறை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாத்துரை நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள கமலாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட சூரியகாந்தி கோ-5 ரக விதைப்பண்ணையை நேரில் ஆய்வு செய்தார். ஆற்றங்கரை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் செயல்படுத்தப்படும், இரு தொகுப்பின் பயனாளிகளை நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்களை எடுத்துக் கூறினார்.

அப்போது அவர், இந்த திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு இரண்டு ஆழ்த்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, சாகுபடி செய்யும் போது அரசால் சொட்டு நீர்பாசனம் அமைத்து கொடுக்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற முன்வர வேண்டும். இந்த தொகுப்பில் அமையும் விவசாய நிலங்களின் உரிமையாளருக்கு ஒரு தொகுப்புக்கு 5 கைத்தெளிப்பான்கள், 5 விசைத்தெளிப்பான்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். பனை விதைகள், பண்ணை கருவிகள், விளைபொருளை உலரவைக்க தார்ப்பாலின் போன்றவை அரசு மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்திட்ட வயல் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், எண்ணெய் வித்துக்கள் செயல் விளக்க திடலை படர்ந்தபுளி கிராமத்தில் ஆய்வு செய்தார். கோவில்பட்டி வட்டாரம் எட்டயபுரம் கிராம துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை மற்றும் இதர இடுபொருட்களின் இருப்பை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, ஆற்றங்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமன், தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எஸ்.ஐ.முகைதீன், வேளாண்மை துணை இயக்குனர்கள் ஜெயசெல்வின் இன்பராஜ், பழனிவேலாயுதம், முருகப்பன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் கீதா (விளாத்திகுளம்), நாகராஜன் (கோவில்பட்டி) மற்றும் அனைத்து வட்டார களப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story