‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Jan 2022 7:04 PM GMT (Updated: 28 Jan 2022 7:04 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எலும்புக்கூடான மின்மாற்றி
திருச்சி மாவட்டம் தென்னூர் அண்ணா நகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள மின்மாற்றி சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும், அதன் கம்பங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே பலத்த காற்று வீசினால் அந்த மின்கம்பம் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மின்கம்பங்களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ருக்மணி, திருச்சி.
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 39 வடக்கு காட்டூர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி பயமுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல் ரஹ்மான், காட்டூர், திருச்சி.
தார்ச்சாலை போடப்படுமா? 
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நடுவலூர் கிராமம். இங்கிருந்து நல்லவண்ணிப்பட்டி செல்ல 5 கிலோமீட்டர் தார்சாலை உள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் முதல் 2 கிலோமீட்டர்  சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிக்கற்கள் உருக்குலைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், துறையூர், திருச்சி.
திருச்சி பாரதி நகர், பிஷப் கல்லூரி எதிரே உள்ள சாலை கடந்த 5 மாதங்களாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட இந்த சாலை சீரமைக்காததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம், திருச்சி.
குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ஆதனூர் ஊராட்சி கீரிப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இப்பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருபாகரன், துறையூர், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுர் தாலுகா,பிச்சாண்டார்கோவில் கிராமம், கீழத்தெரு செல்லும் வழியில் உள்ள  தார் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரைராஜ், பிச்சாண்டார் கோவில், திருச்சி.
ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை
திருச்சி பொன்மலையில் 147 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மாவடிகுளம் உள்ளது. திருச்சியில் பருவ மழை பெய்த போது இந்த குளம் முழுவதும் நிரம்பியது. தற்போது இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த ஆகாய தாமரையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா பிரியா, திருச்சி.

Next Story