தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Jan 2022 8:19 PM GMT (Updated: 28 Jan 2022 8:19 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்திக்கு பாராட்டு
சேலம் வ.உ.சி. மார்க்கெட் பஜார் தெரு, பட்டைக்கோவில், வள்ளுவர் சிலை, தேர்வீதி ஆகிய பகுதிகளில் காய்கறி கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். அந்த பகுதியில் குவிந்து கிடந்த காய்கறி கழிவுகளை அகற்றி தூய்மையாக வைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஜி.வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.
சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் 
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை மேம்பாலம் அருகில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விதிமுறைகளை மீறி ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்திய பேண்டேஜ் துணிகள், கை உறைகள், ஊசிகள், மருந்து பாட்டில்கள், ரத்தம் படிந்த பஞ்சுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், கிருஷ்ணகிரி.
பயன்பாடு இல்லாத அடிபம்பு 
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா ஏலகிரி செல்லும் சாலை கெங்கலாபுரம் கிராமத்தில் அடிபம்பு ஒன்றை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த அடி பம்பு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்பாடு இல்லாத இந்த அடிபம்பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கெங்கலாபுரம், தர்மபுரி.
குடிநீர் வருமா?
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி நண்பர்கள் காலனியில் சில மாதங்களாக  குடிநீர் வராததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-ஊர்மக்கள், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
சாக்கடை கால்வாய் வேண்டும்
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி பாப்பாபட்டி பகுதியில் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் இல்லை. அங்கன்வாடி பள்ளி முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குழந்தைகளின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துமாணிக்கம், பாப்பாபட்டி, சேலம்.
எரியாத தெருவிளக்குகள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா 5-வது வார்டு பண்ணாரி அம்மன் நகரில் 10 ஆண்டுகளாக தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், திருச்செங்கோடு, நாமக்கல்.
மரங்கள் பாதுகாக்கப்படுமா?
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் பேரூராட்சி சார்பாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது அங்கு மாடுகளை கட்டி மரங்களை சேதப்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கன்னங்குறிச்சி, சேலம்.
பன்றிகள் தொல்லை
சேலம் மாவட்டத்தில் எஸ்.கே.டவுன்ஷிப், தாதம்பட்டி, அம்மாபேட்டை காலனி 3-வது கிராஸ் பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாக்கடை கழிவுகளை அந்த பன்றிகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ்வரன், எஸ்.கே.டவுன்ஷிப், சேலம்.

Next Story