மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு போலீசார் அனுமதி மறுப்பு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 8:24 PM GMT (Updated: 28 Jan 2022 8:24 PM GMT)

தற்கொலை செய்த மாணவி லாவண்யா படித்த பள்ளிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி:
தற்கொலை செய்த மாணவி லாவண்யா படித்த பள்ளிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
மாணவி தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதி காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். மதமாற்றம் செய்ய முயன்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக எழுந்த புகார் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
போலீசார் அனுமதி மறுப்பு 
இந்த நிலையில் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாணவி படித்த பள்ளியை பார்வையிட வந்தார். அவருடன் சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
அப்போது தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையிலான போலீசார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினரை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்தனர். 
உங்களுடன் இருக்கிறோம்
இதனால் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சாலையோரத்தில் நின்று பள்ளி நிர்வாகத்தினரிடம் செல்போன் மூலம் பேசினர். உடனே பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பள்ளியில் இருந்து வெளியே வந்து சாலையில் நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்தனர். 
அப்போது தலைமை ஆசிரியரிடம், பொய்யான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று பாலகிருஷ்ணன் கூறினார். பின்னர் அந்த குழுவினர் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனால் மைக்கேல்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story