அம்ரிதா, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மதுரைக்கு பல மணி நேரம் தாமதம்

ஆலப்புழாவில் சரக்கு ரெயில் தரம் புரண்டதால் அமிர்தா, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல மணி நேரம் தாமதமாக மதுரைக்கு வந்து சேர்ந்தன.
மதுரை,
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள ஆலுவா ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சரக்கு ரெயில் தடம்புரண்டது. இதனால், அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, கேரள மாநிலத்தில் இருந்து மதுரை வழியாக இயக்கப்படும் ஒரு சில ரெயில்களின் போக்குவரத்திலும் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக திருச்சி வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், இணைப்பு ரெயில் தாமதத்தால் நேற்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி வழியாக மதுரை வரை இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை 10.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வருவதற்கு பதிலாக, 9 மணி நேரம் தாமதமாக இரவு 7.30 மணிக்கு வந்தது. இதனால், இந்த ரெயில் மதுரையில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நள்ளிரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றது. மேலும், குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 12.30 மணிக்கு பதிலாக சுமார் 6 மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு மதுரை வந்தது. இதனால், இந்த ரெயிலில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இதற்கிடையே, இந்த ரெயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு முன்பதிவு கட்டணம் முழுவதையும் திரும்ப வழங்குவதாக மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதல் அறிவிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
------------
Related Tags :
Next Story