நோட்டாவுக்கு டாட்டா


நோட்டாவுக்கு ‘டாட்டா
x
நோட்டாவுக்கு ‘டாட்டா'
தினத்தந்தி 29 Jan 2022 4:06 PM GMT (Updated: 29 Jan 2022 4:06 PM GMT)

நோட்டாவுக்கு டாட்டா

கோவை

 அடுத்த மாதம் 19-ந்தேதி தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் வேகம பிடித்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் நோட்டாவுக்கு டாட்டா காட்டப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா  இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வேட்பாளர்கள் மீது உள்ள அதிருப்தி காரணமாக சிலர் பொதுத்தேர்தலில் வாக்களிப்பது இல்லை. எனவே அவர்களும் வாக்களிக்க வசதியாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா கொண்டு வரப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக இந்த நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

 அதன்பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்கள், சட்ட மன்ற தேர்தல்களில் நோட்டா பயன்படுத்தப்பட்டது.வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் (பேலட் எந்திரம்) வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் இடம் பெற்றிருக்கும். 
இதில்  கடைசியாக நோட்டா இடம் பெற்றிருக்கும். வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அறிந்து  கொள்ளும் வகையில், பேலட் எந்திரத்துடன் வி.வி.பேட் எந்திரம் இணைக்கப்பட்டிருக்கும்.

 இதில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்கான  ஒப்புகை சீட்டு சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் வழங்கப்படாது.  ஆனால் இந்த ஒப்புகை சீட்டுகள்  வி.வி.பேட் எந்திரத்தில் உள்ள பெட்டியில் மொத்தமாக இருக்கும்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது குலுக்கல் முறையில் வி.வி.பேட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். இந்த ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கையும்,  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பக தன்மையை வாக்காளர்களுக்கு அளிக்கும் வகையில் இந்த வசதி  ஏற்படுத்தப்பட்டது. 

ஆனால் தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்காது. 
போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். 

எனவே வாக்காளர்கள் யாராவது ஒரு வேட்பாளருக்கு மட்டுமே தங்களின் வாக்கினை செலுத்த முடியும். ஆகவே வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்று நோட்டாவுக்கு வாக்களிக்க இயலாது. ஏனெனில் உங்கள் ஓட்டு வேட்பாளருக்கே என்று கூறும் வகையில்,  நோட்டாவுக்கு டாட்டா காட்டப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story