தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை மிதித்து முதியவர் பலி-ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்


தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை மிதித்து முதியவர் பலி-ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 29 Jan 2022 4:46 PM GMT (Updated: 29 Jan 2022 4:46 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றபோது காட்டு யானை மிதித்து முதியவர் பலியானார்.

தேன்கனிக்கோட்டை:
முதியவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 70). இவருடைய மனைவி சரோஜா. இந்த தம்பதிக்கு காளியம்மாள், கிருஷ்ணவேணி, தேவி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் கன்னியப்பன், சரோஜா ஆகியோர் ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
கன்னியப்பன் தனது ஆடுகளை வழக்கமாக வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அவர் தனது 15 ஆடுகளை சின்னவண்ணாத்தி வனப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அவருடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர்கள் மாலையில் வீடு திரும்பினர். ஆனால் கன்னியப்பன் மட்டும் வீடு திரும்பவில்லை.
யானை மிதித்து பலி
இதனால் அவருடைய உறவினர்கள், பொதுமக்கள் வனப்பகுதிக்கு சென்று கன்னியப்பனை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன் தலைமையில் வனத்துறையினர் நேற்று காலை வனப்பகுதியில் கன்னியப்பனை தேடினர்.
அப்போது கன்னியப்பன் உடல் நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினரின் விசாரணையில் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் குட்டிகளுடன் சுற்றி திரிந்ததும், இதை அறியாது கன்னியப்பன் ஆடுகளை அந்த பகுதிக்கு ஓட்டி சென்றபோது, யானை மிதித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது. 
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார், கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே யானை மிதித்து பலியான கன்னியப்பனின் குடும்பத்தினருக்கு மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி முதல் கட்டமாக இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

Next Story