தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இதுவரை 1,042 பேரிடம் விசாரணை


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இதுவரை 1,042 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 29 Jan 2022 5:58 PM GMT (Updated: 29 Jan 2022 5:58 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 1,042 பேரிடம் விசாரணை நடந்துள்ளதாக ஒருநபர் ஆணைய வக்கீல் அருள்வடிவேல் சேகர் கூறினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கபில்குமார் சரத்கர், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 5 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் ஒருநபர் ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை நேற்று நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து ஆணைய வக்கீல் அருள்வடிவேல் சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
35-வது அமர்வு விசாரணையில் ஆஜராவதற்காக 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 5 பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர். முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஆணையத்தின் அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜராவதாக தகவல் தெரிவித்து உள்ளார். இதை ஏற்று அவர் ஒருநபர் ஆணையத்தின் 36-வது கட்ட விசாரணைக்கு அழைக்கப்படுவார்.

ஆணையத்தின் அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெறும். இந்த விசாரணைக்கு கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி., சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்படும். ஒருநபர் ஆணையத்தின் 36-வது அமர்வுடன் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் என நம்புகிறோம். 

விசாரணை நிறைவு பெற்றாலும் ஆணையத்தின் முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை தொகுக்க சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 35 கட்ட விசாரணையில் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,042 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,516 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்  கூறினார்.

Next Story