51 வார்டுகளில் தி.மு.க. போட்டி


51 வார்டுகளில் தி.மு.க. போட்டி
x
தினத்தந்தி 29 Jan 2022 7:42 PM GMT (Updated: 29 Jan 2022 7:42 PM GMT)

திருச்சி மாநகராட்சி தேர்தலில் 51 வார்டுகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டணி கட்சிக்கு 14 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

திருச்சி, ஜன.30-
திருச்சி மாநகராட்சி தேர்தலில் 51 வார்டுகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டணி கட்சிக்கு 14 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையடுத்து தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகள்தீவிரம்காட்டிவருகின்றன.திருச்சிமாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிந்து யார்?, யார்? போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. இதேபோன்று தனித்து களம் இறங்கும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர் விவரங்களை வெளியிடவில்லை. இதன்காரணமாக நேற்று முன்தினம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. நேற்று 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகளை பங்கீடு செய்வது தொடர்பாகவும் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறைஅமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வி துறை அமைச்சருமானஅன்பில் மகேஷ்பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
51 வார்டுகளில் தி.மு.க. போட்டி
இதில் திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டு கவுன்சிலர்கள் பதவியிடங்கள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் தி.மு.க. போட்டியிட திட்டமிட்டுள்ளது. 14 வார்டுகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகியகட்சிகளுக்கு தலா 2 வார்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 வார்டுகள் என 14 வார்டுகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் தங்களுக்கு 10 வார்டுகள் மற்றும் துணை மேயர் பதவி வேண்டும் என்று கேட்டு இருந்த நிலையில், 4 வார்டுகள் என்று கூறியதால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதுபோல் மற்ற கூட்டணி கட்சியினரும் முன்பு போலவே தங்களுக்கு வார்டுகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனால் தி.மு.க.விற்கும், கூட்டணி கட்சியினருக்கும் வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. வார்டுகளை ஒதுக்கீடு செய்வதில் இரவு வரை இழுபறி நீடித்து வந்தது.
இதற்கிடையே தி.மு.க. போட்டியிட திட்டமிட்டுள்ள 51 வார்டுகளுக்கு வேட்பாளர் நேர்காணலும் நேற்று நடந்தது. இதனால் தி.மு.க. தான் 51 வார்டுகளில் உறுதியாக போட்டியிடும் என்று தெரிய வந்தது. மேலும் மேயர் பதவி தி.மு.க.விற்குதான் என்பதும் இறுதியானது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வார்டுகள் ஒதுக்கீடு முடிவுக்கு வந்தது.
கூட்டணிக்கு ஒதுக்கீடு
அதன்படி, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 4 வார்டுகளில், வார்டுகள் 24, 41, 42 ஆகிய 3 வார்டுகள் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள ஒரு வார்டு இன்று முடிவு செய்யப்படும்.
அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 23 மற்றும் 65-வது வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 35 மற்றும் 47-வது வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 17 மற்றும் 39-வது வார்டுகளிலும் போட்டியிடுகிறது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 2 வார்டுகளில் வார்டு எண் 30-ல் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னொரு வார்டு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அதுபோல இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 52-வது வார்டிலும், மனிதநேய மக்கள் கட்சி 28-வது வார்டிலும் போட்டியிடுவது என்றும், இதர 51 வார்டுகளில் தி.மு.க.வைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது.

Next Story