தடங்கத்தில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு


தடங்கத்தில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 30 Jan 2022 4:16 PM GMT (Updated: 30 Jan 2022 4:16 PM GMT)

தடங்கம் கிராமத்தில் நாளை மறுநாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நல்லம்பள்ளி:
தடங்கம் கிராமத்தில் நாளை மறுநாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
ஜல்லிக்கட்டு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்காக ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தையொட்டி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு இடத்தில் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான இட கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவுபெற்றன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வாடிவாசல் வழி, பார்வையாளர்கள் அமரும் அரங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். 
நோய் தொற்று இல்லா சான்று
பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண 150 பேர் மட்டுமே அமரும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காளைகளுக்கு, கால்நடைகளுக்கு நோய் தொற்று இல்லா சான்று பெற்றிருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்குபெற அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான கட்டமைப்பு பணிகளை முழுமையாக விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 
இந்த ஆய்வின்போது ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவர் தாபா சிவா, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் ராமலிங்கம், துணை தலைவர் கந்தசாமி, ஊர்கவுண்டர் காளியப்பன், கிராம வளர்ச்சிக்குழு தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story