பொதுமக்களின் குறைகள் பற்றிய தினத்தந்தி புகார் பெட்டி


பொதுமக்களின் குறைகள் பற்றிய தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Jan 2022 5:31 PM GMT (Updated: 30 Jan 2022 5:31 PM GMT)

பொதுமக்களின் குறைகள் பற்றிய தினத்தந்தி புகார் பெட்டி

பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு

காட்பாடி உழவர் சந்தை அருகில் பயணிகள் நிழற்குடை உள்ளது. வீட்டுக்கும், கடைகளுக்கும் தேவையான காய்கறிகள் வாங்கி விட்டு பொதுமக்கள், வியாபாரத்தை முடித்து வீடு திரும்பும் விவசாயிகள் பஸ்சுக்காக காத்திருக்க வசதியாக நிழற்குடையில் நாற்காலிகள் உள்ளன. அதனை வெளியே உள்ள வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதோடு பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனர். எனவே பயணிகள் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-பா.சஞ்சய்ராஜ், காட்பாடி. 

 சாலையோரம் குப்பை கொட்டும் அவலம்  

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோவிந்தசாமி தெருவில் குப்பைத்தொட்டி உள்ளது. அதில் குப்பைகளை கொட்டாமல் வெளியே குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை நிரந்தரமாக தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்நிதி, போளூர்.

 டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கூடம் எதிரில் தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மது வாங்கும் குடிமகன்கள் அதன் பக்கத்திலேயே செல்லும் சாலையை மது குடிக்கும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மதுவை குடித்து விட்டு அங்கேயே காலிப்பாட்டில்களை போட்டு உடைக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
-வேலன், பள்ளிகொண்டா.

 கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணி

குடியாத்தம் தாழையாத்தம் ஊராட்சி கூடநகரத்துக்கு புதிய தார் சாலை அமைக்க கடந்த ஆண்டு ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. பலத்த மழையை காரணம் காட்டி சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டு 6 மாதம் ஆகிறது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி மீண்டும் சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், குடியாத்தம்.

 கழிவுநீர் கால்வாயை தூர் வாருவார்களா?

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி வார்டு எண்:12-ல் தொகுப்பு வீடுகள் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் கிடக்கிறது. ஒருசில இடத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது. மேலும் புல், செடிகள் புதர்களாக வளர்ந்துள்ளது. இதனால் கழிவுநீர் சீராக ஓடாமல் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் பெருகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வார வேண்டும்.
-ரா.இளவரசன், விளாப்பாக்கம்.


Next Story