தண்டவாள பகுதியில் ‘திடீர்’ தீ; சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தம்


தண்டவாள பகுதியில் ‘திடீர்’ தீ; சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 Jan 2022 5:53 PM GMT (Updated: 30 Jan 2022 5:53 PM GMT)

நாகர்கோவிலில் தண்டவாள பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், டீசல் ஏற்றி வந்த சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் தண்டவாள பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், டீசல் ஏற்றி வந்த சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. 
தீ விபத்து
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள தண்டவாளத்தின் இருபுறமும் செடி, கொடிகள் காய்ந்து குப்பைகளாக உள்ளன. அந்த குப்பை குவியலில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும், அவற்றை தீயணைப்பு வீரர்கள் அணைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. 
நேற்று மதியம் ஒழுகினசேரி பழையாறு பகுதியில் தண்டவாளத்தையொட்டி உள்ள செடி, கொடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் தீ மள... மள...வென எரிந்து பரவ தொடங்கியது. 
உடனே, அந்த பகுதியில் உள்ள மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், நாகர்கோவில் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சரக்கு ரெயில் நிறுத்தம்
இதற்கிடைேய அந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு டீசல் ஏற்றிக்கொண்டு செல்லும் ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை கடந்தபோது, தீ விபத்து குறித்து அதிகாரிகள் மூலம் ரெயில் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சரக்கு ரெயிலை டிரைவர் நடு வழியில் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 
30 நிமிடங்கள் தாமதம்
இதற்கிடைேய தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடம் போராடி குப்பையில் எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர். 
அதன்பிறகு நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரெயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந் த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story