3 வாரத்திற்கு பிறகு ஞாயிறு முழு ஊரடங்கு வாபஸ்: குமரியில் வாகனங்கள் ஓடியதால் மீண்டும் பரபரப்பான சாலைகள்


3 வாரத்திற்கு பிறகு ஞாயிறு முழு ஊரடங்கு வாபஸ்: குமரியில் வாகனங்கள் ஓடியதால் மீண்டும் பரபரப்பான சாலைகள்
x

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து நேற்று குமரி மாவட்டத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பாக சாலைகள் காணப்பட்டன. சுற்றுலாதலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில், 
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து நேற்று குமரி மாவட்டத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பாக சாலைகள் காணப்பட்டன. சுற்றுலாதலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முக்கியமாக இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 
இதனால் அன்றைய தினம் பொதுப்போக்குவரத்து மற்றும் கடைகள் செயல்படவில்லை. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். முழு ஊரடங்கு காரணமாக குமரி மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இதனால் அரசு விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. 
பஸ்கள் இயங்கின
முக்கியமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் வழக்கம் போல இயங்கின.
இதனால் குமரி மாவட்டம் இயல்பு நிலையில் காணப்பட்டது. கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முடங்கிப்போய் இருந்த குமரி மாவட்டம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கின் போது பொதுமக்கள் கடைக்கு சென்று டீ குடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். ஆனால் நேற்று ஊரடங்கு இல்லாததால் அனைத்து இடங்களிலும் காலையிலேயே டீ கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. மேலும் ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இறைச்சி வியாபாரம்...
பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடியதால் சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது. இறைச்சி வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்தது. 
கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story