வாழை நார் காய வைக்கும் பணி மும்முரம்


வாழை நார் காய வைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 30 Jan 2022 8:10 PM GMT (Updated: 30 Jan 2022 8:10 PM GMT)

கபிஸ்தலம் பகுதியில் பூமாலை கட்ட பயன்படும் வாழை நார் காய வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாழை நாருக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கபிஸ்தலம்:
கபிஸ்தலம் பகுதியில் பூமாலை கட்ட பயன்படும் வாழை நார் காய வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாழை நாருக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 
வாழை சாகுபடி
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், இளங்கார்குடி, வன்னியடி, கார்த்திகை தோட்டம், நாணல்காடு, நாயக்கர் பேட்டை, உள்ளிக்கடை, மேட்டு தெரு, சருக்கை, வாழ்க்கை, சத்தியமங்கலம், ராமானுஜபுரம், உமையாள்புரம், அண்டகுடி, தியாகசமுத்திரம், அலவந்திபுரம், மருத்துவக்குடி, நாககுடி, சுவாமிமலை, திம்மகுடி, பாபுராஜபுரம், திருவலஞ்சுழி, ஆதனூர், புள்ளபூதங்குடி, திருவைகாவூர், பட்டவர்த்தி, துரும்பூர், ஓலைப்பாடி, கொந்தகை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழைப்பயிர் சாகுபடி செய்து உள்ளனர். திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்டது. 
இந்த நிலையில் கரும்பு பயிர் செய்த விவசாயிகள் தங்களுடைய விவசாய பயிர்களை மாற்றி நெல் மற்றும் வாழை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் வாழை மரங்கள் பயிர் செய்யலாம். 
பணி மும்முரம்
அவ்வாறு பயிர் செய்த வாழையில் ஒரு ஆண்டு முதல் அறுவடை செய்ய முடியும். வாழைத்தார் மட்டுமின்றி வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ என பல வகைகளில் வாழை மரம் லாபம் தருகிறது. வாழை மரத்தை அடியுடன் வெட்டி அதில் உள்ள நார்களை பிரித்து வாழை தோட்டத்திலேயே காயவைத்து பூமாலைகள் கட்ட பயன்படுத்தப்படுகிறது.   இந்த நார்களை விற்பனைக்கு அனுப்புவதன் மூலமாகவும் வாழை விவசாயிகள் வருமானம் ஈட்ட முடியும். இந்த நிலையில் கபிஸ்தலம் பகுதியில் பூமாலைகள் கட்ட பயன்படும் வாழை நார்களை காய வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 
விவசாயிகள் வேதனை
இந்த நார்கள் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வாழை நார்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த வாழை நார்களை வாழை மரத்திலிருந்து பிரித்து சருகு ஆக்குவதற்கு ஆகும் ஆட்கள் கூலி மற்றும் விற்பனைக்கு அனுப்ப ஆகும் செலவுத்தொகை கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். வாழை நாருக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story