பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது ரூ.15 லட்சம் உதிரிப்பாகங்கள் நாசம்


பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது ரூ.15 லட்சம் உதிரிப்பாகங்கள் நாசம்
x
தினத்தந்தி 31 Jan 2022 12:16 AM GMT (Updated: 31 Jan 2022 12:16 AM GMT)

பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள லாரி உதிரிப்பாகங்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

பூந்தமல்லி,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து லாரிகளுக்கான உதிரிப்பாகங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று மத்திய பிரதேச மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் சித்திக் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார்.

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் டீசல் போடுவதற்காக கன்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. திடீரென கன்டெய்னர் பெட்டியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள், கன்டெய்னர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். டிரைவர் சித்திக், உடனடியாக கன்டெய்னர் லாரியை பெட்ரோல் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் ஓட்டிச்சென்று சாலையோரமாக நிறுத்தினார்.

கன்ெடய்னர் லாரியில் தீ

அதற்குள் கன்டெய்னர் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், கன்டெய்னர் பெட்டியில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர்.

எனினும் கன்டெய்னரில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள லாரி உதிரிப்பாகங்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. கன்டெய்னர் பெட்டியும் தீயில் கருகியது. உரிய நேரத்தில் கன்டெய்னர் லாரியை பெட்ரோல் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story