சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:37 PM GMT (Updated: 31 Jan 2022 4:37 PM GMT)

காவல் உதவி எண்ணுக்கு வந்த புகாரின் பேரில் விருத்தாசலம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கடலூர், 

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பெண்களின் நலன் காக்க லேடீஸ் பர்ஸ்ட் 82200 06082 முதியோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் 82200 09557 என்ற புதிய காவல் உதவி எண்களை அறிமுகப் படுத்தினார். இந்த உதவி எண்களுக்கு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி விருத்தாசலம் அருகே கோ.மாவிடந்தல் கிராமத்தில் இருந்து லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்ட நபர், தங்கள் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அதை தடுத்து நிறுத்துமாறும் புகார் தெரிவித்தார்.

தடுத்து நிறுத்தம்

அதையடுத்து கம்மாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கோ.மாவிடந்தல் கிராமத்துக்கு நேரில் சென்று, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களிடம் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்யக்கூடாது, அது சட்டப்படி குற்றம் என அறிவுரை கூறியும், மீறி திருமண ஏற்பாடு செய்தால் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள் என கடுமையாக எச்சரித்ததன்பேரில் திருமண ஏற்பாடுகளை அவர்கள் கைவிட்டனர். இதன் மூலம் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த மாதம் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணுக்கு 52 புகார்கள் பதிவான நிலையில், 6 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், 8 புகார்களுக்கு சி.எஸ்.ஆர். பதிவு செய்தும், ஏனைய புகார்களுக்கு நேரில் விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது.

Next Story