வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 31 Jan 2022 4:56 PM GMT (Updated: 31 Jan 2022 4:56 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

கோவை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 

இந்த தேர்தலில் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி அலுவலர்கள் 10 ஆயிரத்து 172 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப் படுவது வழக்கம். 

இதன்படி முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது. கோவை மாநகராட்சி தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி, பி.எஸ்.ஜி. கல்லூரி, ராமநாதபுரம் பெண்கள் பள்ளி, ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் பள்ளி உள்பட 5 இடங்களில் பயிற்சி அளிக்கப் பட்டது. 

10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்

இதேபோல் 7 நகராட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த நகராட்சி பகுதியிலும், பேரூராட்சி தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு 9 இடங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த பயிற்சியில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 50 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன் படுத்தப்படுகிறது. எனவே கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் ஆகிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு ஒன்றுடன், ஒன்றை இணைக்க வேண்டும், பழுது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்,

 வாக்குப்பதிவு முடிந்ததும் எவ்வாறு சீல் வைக்க வேண்டும், வாக்குப்பதிவிற்கு முன் அதில் உள்ள தகவல் களை அழிப்பது எப்படி என்பது உள்ளிட்டவை குறித்து பல்வேறு செயல் விளக்கங்களை அதிகாரிகள் அளித்தனர்.

பூஸ்டர் தடுப்பூசி

மேலும் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்தல் குறித்த விளக்க கையேடுகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி முகாமில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 9 மாதங் களை கடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. 

கொரோனா பரவலை தடுக்க பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். வருகிற 9-ந் தேதி 2-ம் கட்ட பயிற்சியும், 18-ந் தேதி 3-ம் கட்ட பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story