வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:03 PM GMT (Updated: 31 Jan 2022 5:03 PM GMT)

கோவையில் பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.

கோவை

கோவையில் பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. 

பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

நீண்ட நாட்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்ததால் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அவற்றை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. 

கோவையில் உள்ள துணிவணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தாப்புதூர் மற்றும் மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை தீவிரமாக நடந்தன. 

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா கூறியதாவது:-

ஆன்லைனில் கலந்துரையாடல்

பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி, கடந்த 2 நாட்களாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரை யாடல் நடந்தது. அப்போது பள்ளிகள் திறப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

பள்ளிகளில் மட்டும் அல்லாமல் பள்ளிக்கு வாகனங்களில் வரும் போதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். 

மாணவிகளுக்கு காய்ச்சல் இருந்தாலோ அல்லது மாணவர்களின் வீட்டில் யாருக் காவது காய்ச்சல் இருந்தாலும் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

2,040 பள்ளிகள்

முன்னதாக கடந்த 3 நாட்களாக வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. மேலும் கழிப்பறைகள், குடிநீர் தொட்டி மற்றும் மைதானங்களும் சுத்தப்படுத்தப்பட்டது. 

கோவை மாவட்டத்தில் உள்ள 2,040 பள்ளிகளில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 727 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story