காஞ்சீபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

காஞ்சீபுரத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்காக நடத்தப்பட்ட தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பயிற்சி வகுப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 3 பேரூராட்சிகளுக்கு வரும் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக காஞ்சீபுரம் நகரில் உள்ள 51 வார்டுகளுக்கும் 218 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாக்குசாவடிகளில் பணியாற்றுவதற்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மொத்தம் 840 பேருக்கு காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
மேலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் அதை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வகுப்பை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு பதிவின்போது கையாள வேண்டிய நடைமுறை கருத்துக்களை அவர் எடுத்து கூறினார்.
மாமல்லபுரம்
இதே போல் மாமல்லபுரம் பேரூராட்சியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மாமல்லபுரம் முத்தமிழ் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி கணேஷ் தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் 80 அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் கவுன்சிலர் பெயர், பதவி மற்றும் சின்னத்தை எப்படி வைப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






