வாலாஜாபாத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

வாலாஜாபாத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திருவாங்கரணை கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 26). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக திருவக்கரை கிராமத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வாலாஜாபாத்-காஞ்சீபுரம் சாலையில் செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கனரக லாரியை துரைராஜ் முந்தி செல்ல முயன்றார்.
அப்போது சங்கராபுரத்தை சேர்ந்த நீலமேகம் (40) காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி செல்ல முயன்றார். இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் துரைராஜ் பக்கவாட்டில் வந்த கனரக லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். நீலமேகம் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த நீலமேகத்தை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துரைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






