தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சாலையில் பள்ளம்
கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை எதிரில் சாலையில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு, பின்னர் மூடப்பட்டது. ஆனால் சரிவர மூடாததால் அந்த இடம் தற்போது பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார் கள். எனவே விபத்து ஏற்படும் முன்னர் அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
ஜோஸ்வா, கோவை.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
மரக்கிளைகள் அகற்றம்
கோவை டாடாபாத் ஆறுமுக்கு சந்திப்பு பகுதியில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மரக்கிளைகள் வெட்டி போடப்பட்டு இருந்தன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு போடப்பட்டு இருந்த மரக்கிளைகளை அகற்றினார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
சாந்தினி, டாடாபாத்.
தடுப்புச்சுவரில் சுவரொட்டிகள்
பொள்ளாச்சி-கோவை மெயின் ரோட்டில் விபத்தை தடுக்க ரோட்டின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு சுவரில் விதவிதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த சுவரொட்டிகளை சாப்பிட மாடு, ஆடுகள் வருவதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே, தடுப்புச்சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
தவமணி, பொள்ளாச்சி.
நிரம்பி வழியும் சாக்கடை
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் சில இடங்களில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாய நிலை நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
பி.முத்துகுமார், பழையூர்.
பஸ் நீட்டிக்கப்படுமா?
கோவை காந்திபுரத்தில் இருந்து குமாரபாளையம் வரை செல்லும் 41 என்ற எண் கொண்ட டவுன் பஸ்சும், கோப்பகாட்டு புதூர் வரை செல்லும் 19 ஜெ என்ற பஸ்சும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை சோமனூர் வரை நீட்டித்தால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், சூலூர்.
குப்பைகளுக்கு தீ வைப்பு
கோவை டாடாபாத் பவர்ஹவுசில் பின்புறம் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. அந்த குப்பைகளுக்கு சிலர் தீ வைத்துவிட்டு செல்வதால் அந்தப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் இங்கு வசதித்து வருபவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும்.
சுந்தரவடிவேல், டாடாபாத்.
ஒளிராத தெருவிளக்குகள்
கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ தேவி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரியாக ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்தப்பகுதியில் இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
சூரிய பிரபா, கணபதி.
ஆபத்தான மின்கம்பம்
கோவை வெள்ளலூர் வள்ளலார் காலனி சித்தி விநாயகர் கோவல் எதிரே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
பிரேம்குமார், வள்ளலார் காலனி.
Related Tags :
Next Story






