கிணற்றில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு


கிணற்றில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு
x
கிணற்றில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு
தினத்தந்தி 5 Feb 2022 9:25 PM IST (Updated: 5 Feb 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே தோட்டத்தில் மோட்டார் சுவிட்சை போடச்சென்ற போது கிணற்றில் தவறி விழுந்த புது மாப்பிள்ளை இறந்தார். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பி.இ.பட்டதாரி

கிணத்துக்கடவு அருகே வேலாயுதம்பாளையம், பேச்சஸ் தோட்டத்தை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மனைவி ஆனந்த ஜோதி. இவர்களுடைய மகன் ராகுல் ராஜ் வயது (வயது 28). பி.இ.பட்டதாரி.   
இந்த நிலையில் தந்தை இறந்து விட்டதால், ராகுல்ராஜ் தனது தாயுடன் வசித்து வந்தார். ராகுல்ராஜூக்கு கடந்த ஆண்டு பிரியா (24) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. 

தற்போது  7 மாத கர்ப்பிணியான பிரியா, வெள்ளேகவுண்டன் புதூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். ராகுல் ராஜ் என்ஜினீயரிங் படித்து இருந்தாலும், தங்களது தோட்டத்தில் தந்தை இறந்த விட்டதால் விவசாய பணிகளை  கவனித்து வந்தார். 

கிணற்றில் மூழ்கினார்

இந்த நிலையில் நேற்று காலை ராகுல் ராஜ் தனது தோட்டத்தில் உள்ள தரைமட்ட கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தோட்டத்துக்கு பாய்ப்பதற்காக, மோட்டார் சுவிட்ச்சை போட சென்ற போது திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்தார். 

அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்துபார்த்தனர். பின்னர் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரி காளிமுத்து, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய ராகுல் ராஜ் உடலை மீட்டனர்.

வளைகாப்பு

இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த ராகுல் ராஜ் மனைவி பிரியா மற்றும் குடும்பத்தினர் இறந்து கிடந்த ராகுல் ராஜ் உடலைப் பார்த்து கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது. இதற்கிடையில் ராகுல் ராஜின் தாயார் தனக்கு இருந்த ஒரே மகனும் இறந்து விட்டானே என்ற கவலையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக  கிணத்துக்கடவில் உள்ள ஒரு மருத்துமனையில் சேர்த்தனர்.

பிரியாவுக்கு இன்று வளைகாப்பு நடத்த வேண்டிய நேரத்தில் கணவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story