பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்


பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்
x
தினத்தந்தி 6 Feb 2022 10:55 PM IST (Updated: 6 Feb 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கோவை

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

பாதாள சாக்கடையில் அடைப்பு

கோவை காந்திபுரத்தில் இருந்து பாதாள சாக்கடை நஞ்சப்பா ரோடு, அவினாசி சாலை, ரெயில் நிலையம் வழியாக உக்கடம் புல்லுக்காடு செல்கிறது. 

இந்த நிலையில் இந்த பாதாள சாக்கடை யில் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் உள்ள ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறியது. 

இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மத்திய மண்டல உதவி செயற்பொறியாளர் பாலசந்தர் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தனர்.

சாலையில் ஆறாக ஓடியது 

இந்த நிலையில் அந்த இடத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம் முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த ஆள் இறங்கு குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவில் வெளியேறியது. 

உடனே சுகாதார பணியாளர்கள் அந்த அடைப்பை சரிசெய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 

இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய கழிவுநீர் போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் கடந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை சாலையோரத்தில் ஆறாக ஓடியது. 

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. அத்து டன் அந்த வழியாக வந்த வாகனங்கள் கழிவுநீரை வாரியடித்தபடி சென்றதால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் கழிவுநீர் வெளியேறிய ஆள்இறங்கும் குழியில் வாகனங்கள் செல்வதை தடுக்க சாலையில் மரக்கட்டைகள் வைக்கப்பட் டது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் ஒதுங்கி சென்றன. 

இதைத்தொடர்ந்து பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் வாகனம் வரவழைக்கப்பட்டது. 

சரிசெய்யப்பட்டது

பின்னர் அந்த வாகனம் மூலம் கழிவுநீரை உறிஞ்சி பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்யப்பட்டது.

 இதனால் அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நின்றது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். 


Next Story