ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி படப்பை குணாவின் நண்பர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி படப்பை குணாவின் நண்பர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
படப்பை குணா
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா (வயது 43). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அச்சுறுத்தி மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. குணா தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை நியமிக்கப்பட்டார். தனிப்படை போலீசார் படப்பை குணா மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் படப்பை குணா சில நாட்களுக்கு முன் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார்.
ரவுடி படப்பை குணாவுக்கு உதவியாக இருந்ததாக 30 போலீசார் மீது தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். குணாவின் மனைவி உள்பட பலரை போலீசார் விசாரித்தனர்.குணாவின் நெருங்கிய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
நண்பர் கைது
இந்த நிலையில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி குணா கடந்த ஆண்டு பிறப்பித்த 110 நடத்தை விதிமீறல் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சைலேந்தர் விசாரணை நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து பிரபல ரவுடி படைப்பை குணாவின் நெருங்கிய நண்பரான ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பிரபு (38) என்பவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து 4 விலை உயர்ந்த சொகுசு கார்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story