மெய்யூரில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும்; அதிகாரிகள் உறுதி
மெய்யூரில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
கொசஸ்தலை ஆறு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் கிராம எல்லையில் கொசஸ்தலை ஆறு பாய்கிறது. பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பும் போது உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. மேலும் உபரிநீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மெய்யூரில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் 30 கிராம பொதுமக்கள் மாற்று வழியில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
மேம்பாலம் அமைக்க நடவடிக்கை
இதனால் மெய்யூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று 30 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று மெய்யூர் தரைப்பாலம் பகுதியில் தர்ணா போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு சாரதி ஆகியோர் 30 கிராம பொதுமக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் போர்க்கால அடிப்படையில் மெய்யூர் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் நடைபெற இருந்த தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story