வால்பாறையில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


வால்பாறையில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Feb 2022 11:12 PM IST (Updated: 7 Feb 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வால்பாறை
வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வனவிலங்குகள் 

மலைப்பகுதியான வால்பாறையில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர ஏராளமான அரியவகையான பறவைகளும் உள்ளன. 

மேலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வால்பாறை பகுதிக்கு வருகிறது. இவ்வாறு வரும் காட்டு யானைகள் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு இரவு நேரத்தில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

இதை தடுக்க வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காட்டு யானைகள் உயிரிழப்பு

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் 6 காட்டு யானைகள் உயிரிழந்து உள்ளன. இதில் 10 வயதுக்கும் குறைவாக உள்ள குட்டியானைகள் 4 ஆகும். 

இது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-  

போதிய வசதிகள் இல்லை

வால்பாறையில் மலைப்பகுதிதான் அதிகம். இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு போதிய வசதிகள் இல்லை. மேலும் ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளிலும் வனக்குழு அமைத்து தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  

அதுபோன்று வேட்டைதடுப்பு காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். அப்போதுதான் வனவிலங்குகள் சோர்வுற்றோ அல்லது காயம் அடைந்து போராடினாலோ அதை கண்டுபிடித்து உடனடியாக காப்பாற்ற முடியும். 

தேவையான வசதிகள்

அதுபோன்று காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் தேவையான உணவு, தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். அத்துடன் சோலைகளை அதிகரிக்க வேண்டும். 

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் குறிப்பிட்ட நேரத்துக்கு வாகனங்கள் செல்வதை தடை செய்வதுடன், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு என்று தனி வனத்துறை மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story