நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கொரோனா வழிகாட்டு நெறிமுறை ஆலோசனை கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறை ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் போலீஸ் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது:-
சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள் மோட்டார் வண்டிகள் ஊர்வலம் போன்றவை வருகிற 11-ந்தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடர் அறிவுரைகளை வழங்கும்.
உரிய சான்று பெற வேண்டும்
அரசியல் கட்சிகளின் ஊர்வலம், குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் வருகிற 11-ந்தேதி வரை அனுமதிக்கப்பட மாட்டாது.
பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடர் அறிவுரைகளை வழங்கும்.
இருப்பினும், கொரோனா தொற்று வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றும் அடிப்படையில், அவ்வப்போது வாக்கு சேகரிக்கும் காலத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு மனித பேரணி நடத்த மீள ஆய்வு செய்யும்.
நியமிக்கப்பட்ட திறந்தவெளி மைதானத்தில் அரசியல் கட்சி அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் 1000 பேர் அல்லது கூட்ட திடலின் கொள்ளளவுக்கு 50 சதவீதம் மக்கள் அல்லது அவற்றில் குறைவான எண்ணிக்கையுடன் கூட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதியளிக்க முடிவெடுத்துள்ளது.
உள்அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் அல்லது உள் அரங்க கூட்டத்தின் கொள்ளளவை பொறுத்து 50 சதவீதம் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளபடி, உள்ளரங்கு கூட்டம் நடத்தப்படும்போது மாவட்ட தேர்தல் அலுவலரால் தேர்தலின்போது கொரோனா தொற்று தடுப்பு தொடர்பான பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தொடர்பு அலுவலரிடமிருந்து உரிய சான்று பெற வேண்டும்.
கட்டுப்பாடுகள்
வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நபர்களின் எண்ணிக்கை வரையறையை உயர்த்தி பாதுகாவலர்கள் நீங்கலாக 20 நபர்களை அனுமதிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளின்போது, அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும் கொரோனா தொற்று பொருத்தமான நடத்தை முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைகளை இணக்கமாக கடைபிடிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்கனவே உள்ள 10.12.2021 மற்றும் 25.1.2022 நாளிட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள ஏனைய கட்டுபாடுகள் தொடர்ந்து இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story