அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
திருத்தணி நகராட்சியில் 18-வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் தனது வேட்பு மனுவை தி.மு.க.வினருடன் வந்து வாபஸ் பெற்று கொண்டார். இதையடுத்து அ.தி.மு.கவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ந்தேதி நிறைவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் குறிப்பாக திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் சரவணப்பொய்கை திருக்குளத்தில் 18-வது வார்டில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நேரடி போட்டியில் இருந்தது. மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாள் ஆகும்.
கடும் வாக்குவாதம்
இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் வாணிஸ்ரீ தி.மு.க. நிர்வாகிகளுடன் வந்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த சம்பவத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் வாணிஸ்ரீ சொகுசு காரில் இருந்து இறங்கி தேர்தல் அலுவலகத்துக்கு செல்லும் போது அ.தி.மு.க.வினர் அவரை தடுக்க பார்த்தனர். இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை கதவை மூடிவிட்டனர்.
சாலை மறியல்
இதனையடுத்து திருத்தணி நகராட்சிக்கு எதிர்ப்புறத்தில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணி நகராட்சியின் தேர்தல் அலுவலர் ராமஜெயம் காரில் வந்தார். அவரது காரை அ.தி.மு.க.வினர் சிறைபிடித்தனர். மேலும் 18-வது வார்டில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை ஐகோர்ட்டுக்கு செல்ல உள்ளதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் வாணிஸ்ரீ தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதையடுத்து அந்த வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பூபதியின் மனைவி சரஸ்வதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story